உறவின் குரல்

உறவின் குரல்! அன்பு உறவுகளே! பா இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். தை பிறந்து விட்டது வழி பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. நம்பிக்கை பொய்ப்பதில்லை. நலமுடன் வாழ ! வாழ்வின் அனைத்து நலன்களும் பொங்கி பூரிக்க மக்கள் மறுமலர்ச்சி மன்றத்தின் நல்வாழ்த்துக்கள். வழக்கம் போல் நம் மன்றம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை நமது பள்ளி வளாகத்தில் நமது மாதப்பொதுக்குழுவின் ஒரு அங்கமாக கொண்டாட இருக்கின்றது. ஆகவே உறவுகள் அனைவரும் முத்தரையர் இனம் போற்றும் இன உணர்வுப் பொங்கலைக் கொண்டாடி மகிழ துடையூர் அருண்வாசம் பள்ளிக்கு 13.01.2019 ஞாயிறன்று வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறது மக்கள் மறுமலர்ச்சி மன்றம். நடந்து முடிந்தவை நல்லவையே எனக்கொள்ளவேண்டும் என்பர் சான்றோர் இருப்பினும் கசா புயல் அவ்வாறான எண்ணத்தை சிதைத்து விட்டது. நடப்பது நடந்து விட்டது நடக்க இருப்பவை நல்லவையாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும் நல்லவையாக அமையும் அமைப்போம் என்ற நம்பிக்கையுடனும் புத்தாண்டை தொடங்குவோம் வரவேற்போம். நமது மன்றம் அரசியல் சாரா மன்றம் என்றபோதிலும் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் அதற்கு குரல் கொடுக்க வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து கொண்டதல்ல. தமிழ் நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் வஞ்சனை செய்யும் விதத்தில மேகதாது அணைகட்ட கர்நாடக அரசு முயற்சிப்பதும் அதற்கு நீதி மன்றமும் மத்திய அரசும் துணைபோவதும் நமக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இக்கருத்துக்கு ஏற்பளிப்பது போல் நம் மன்றத் துணைச் செயலாளர் திரு அ.முத்திரியன் அவர்கள் தலைமையில் நேரிடையே பாதிக்கப்பட்ட நம் மக்களுக்கு இயன்ற உதவிகளை செய்து வந்துள்ளார். அவருடன் சென்று துயர் துடைக்க பயணித்த பங்களித்த உறவுகள் அத்துணை பேருக்கும் நம் வாழ்த்துக்களும் வணக்கங்களும். நமது அருண்வாசம் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களுமாக 5000 ரூபாயினை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அளித்து தங்களது பிறர் துயர் துடைக்கும் தார்மீகக்கடமையை செவ்வனே செய்துள்ளனர். அச்சிறார்களின் கருணை உள்ளங்களுக்கு நல்வாழ்த்துக்கள். கடந்த மாதப்பொதுக்குழுவில் கலந்து கொண்ட வைரி செட்டி பாளையம் திரு ஆணை.மாணிக்கம் அவர்கள் நமது மாதக்கூட்டத்திற்கு வருகை தந்து தனது இன உணர்வுகளையும் நமது தற்போதைய நிலைகுறித்த கவலையையும் வெளியிட்டதுடன் அரசின் கவனத்தை திருப்ப நம் மக்கள் முன்னேற்றத்தை உறுதி செய்ய உள்ஒதுக்கீட்டினைப்பெற முயற்சி எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்துச்சென்றுள்ளார் நாமும் அதற்கு உதவுவதாக உறுதி கூறியுள்ளோம்.