அருண்வசாம் பள்ளியில் நடைபெற்ற அருமையான முப்பெரும் விழா!

அருண்வசாம் பள்ளியில் நடைபெற்ற அருமையான முப்பெரும் விழா!


தை மகளை வரவேற்றல், பொங்கலிடல், உலகத்தமிழ் பேரசான் வள்ளுவனின் மணிமண்டபத்தை திறந்து வைத்தல் ஆகிய நிகழ்வு - களைக் கொண்ட சனவரி மாத மக்கள் மறுமலர்ச்சி மன்ற மாதப்பொதுக்கூட்டம் 2019 ஆண்டில் நடைபெறும் முதல் கூட்டம் சீரும் சிறப்புமாக முப்பெருவிழாவாக துடையூர் அருண்வாசம் துடையூர் அருண்வாசம் பள்ளி வளாகத்தில் 13.01.2019 ஞாயிற்றுக்கிழமை முற்பகலில் நடைபெற்றது. மன்றத் தலைவர் முனைவர் பெ. லோகநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவினில் திருச்சி மாநகரத்தில் தலைசிறந்த தணிக்கையாளராக செயல்பட்டு வரும் உறவினர் எழுதமிழ் இயக்கத்தின் தலைவர் தணிக்கையறிஞர் குமரசாமி அவர்கள் பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் மணிமண்டபத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக மக்கள் மறுமலர்ச்சி மன்றம் கல்வி அறக்கட்டளையின் செயலாளர் திரு கோ. சற்குணம் அவர்கள் வந்திருந்த விருந்தினர்களையும் உறுப்பினர்களையும் வரவேற்று உரை நிகழ்த்தினார். அதன் பின் தை மகளை வரவேற்கும் நிகழ்வாக திருமதி லட்சுமி முருகேசன் பள்ளியின் முதல்வர் மற்றும் மாணவர்களின் தாய்மார்கள் என 5 மகளிர்கள் திருச்சுடர் ஏற்ற குழுமியிருந்தோர் தை மகளை வரவேற்று பொங்கலோ பொங்கல் என்றும் பொங்கும் மங்களம் எங்கும் பொங்கட்டும் என்றும் வாழ்த்துக்கூறி தை மகளை வரவேற்றனர். உயர் மட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் சென்னை அட்சயா சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் திரு டி. ஆர்.செல்வராசு, மன்றப்பொறுப்பாளர்கள் திரு பா. சண்முகம், திரு சு. இரவிச்சந்திரன், முதலைப்பட்டி திரு அ. முத்திரியன், வேங்கூர் திரு ஏ. செவந்திலிங்கம், ஆசிரியர் மூ. முருகேசன் மற்றும் திருக்காம்புலியூர் திரு. டி.எம். பழனியாண்டி ஆகியோர் முன்னிலையில் எழுதமிழ் இயக்கத்தின் தலைவர் தணிக்கை அறிஞர் மு.குமரசாமி அவர்கள் உலகப்பேராசான் திருவள்ளுவரின் மணிமண்டபத்தைத் திறந்து வைத்தார். வள்ளுவர் புகழ் பாடி தஞ்சை புலவர் கூ.மாரிமுத்து அவர்கள் இறைவணக்கம் பாடி வள்ளுவர் புகழ்மாலை 501 போற்றிகளை உச்சரிக்க கூடியிருந்த அனைவரும் அதனை சேர்ந்து குரலெழுப்பி வள்ளுவனைப் போற்றினர். பின்னர் அருண்வாசம் பள்ளி மாணவ மாணவிகள் திருக்குறளின் முதல் 10 அதிகாரங்களையும் முற்றோதல் செய்தனர். வள்ளுவப் பெருந்தகைக்கு 501 மலர் தூவி மரியாதை செலுத்தினர். வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் வள்ளுவர் போற்றியினை ஒரு சேர உச்சரித்து வள்ளுவனுக்கு வணக்கஞ்செய்தது சிறப்பாக இருந்தது. விழாத் தலைவர் முனைவர் பெ. லோகநாதன் அவர்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் மூன்று விழாக்களின் சிறப்புக்களையும் எடுத்துக் கூறியதோடு பொங்கல் விழா ஒரு நன்றி கூறும் பெரும் விழா அதனில் உலகு உய்வதற்கு உதவும் சூரியனுக்கும், உலகம் வாழ்வதற்கு உழைத்துவரும் உழவனுக்கும், அவனுக்கு உதவிவரும் கால்நடைகளுக்கும் நன்றி பாராட்டி அவற்றிற்கு வணக்கங்கூறி வாழ்த்தும் விழாவே பொங்கல் விழா. அதனில் கூடுதலாக நம் பள்ளியினை நிறுவி நிருவகித்து வரும் மக்கள் மறுமலர்ச்சி மன்றம் கல்வி அறக்கட்டளை மற்றும் மக்கள் மறுமலர்ச்சி மன்றம், அவற்றின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி திறம்பட, வெற்றிகரமாக நடைபெற ஒத்துழைப்பு நல்கும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஆகிய அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி பகரவே இந்நிகழ்வு பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. பள்ளியின் வளர்ச்சி பெற்றோர்களும் ஏனையோரும் பாராட்டும் வண்ணம் இருக்கிறது. பள்ளி அனைத்து மாணவர்களுக்கும் விபத்துக்காப்பீடு, கராத்தே தற்காப்புக்கலை, சிறப்பு இந்தி மொழிப்பயிற்சி , ஓவியப்பயிற்சி, அபாகஸ் எனும் கணிதமுறைப்பயிற்சி, ஸ்மார்ட் வகுப்பறை என பல சிறப்புக் கூறுகளுடன் நிகழ பெரிதும் துணை நிற்கும் அனைவருக்கும் நன்றி கூறி வணக்கம் செலுத்தும் நாளாக பள்ளி வளாகத்தினுள் நடத்தப்படுகிறது என்ற செய்தியைக் கூறி அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை கூறினார்.


பள்ளியின் தாளாளர் முனைவர் பெ.லோகநாதனின் சொந்த செயலவில் ரூ. 30,000/- செலவில் பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் மணிமண்டபத்தை திறந்து வைத்த தணிக்கை அறிஞர் மு. குமரசாமி அவர்கள் குறுகிய காலத்திலேயே பள்ளி இத்துணை சிறப்புக்களுடன் நடைபெற்று வருவதைக் கண்டுபெருமிதம் அடைவதாகவும் இப்பள்ளியின் மேம்பாடு நம் இனத்தின் மேம்பாடாக அமைய வேண்டும்; அதற்கான ஒத்துழைப்பினை அனைவரும் நல்க வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்ததுடன் இதனை சிறப்பாக நடத்தி வரும் மக்கள் மறுமலர்ச்சி மன்றம், கல்வி அறக்கட்டளை அவற்றின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு தனது வாழ்த்தினைக் கூறி பாராட்டுக்களைத் தெரிவித்தார். தமிழினத்தின் அடையாளமாக, பெருமையாக, கலாச்சாரத் தூதுவனாக விளங்கும் பொய்யாமொழிப் புலவன் திருவள்ளுவருக்கு சிலை அமைத்து, மணிமண்டபம் அமைத்துள்ள மன்றம் மற்றும் கல்வி அறக்கட்டளைப்பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் பாராட்டுக்குரியவர்கள் என்று கூறினார். அனைவரும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து பள்ளியின் தரத்தினை உயர்த்துவதற்கு உறுதுணையாக நிற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மன்றத் துணைத் தலைவர் திரு பெ. தனபால் அவர்கள் பள்ளியின் செயல்பாட்டினை பாராட்டி அவையோருக்கும் மாணவர்களுக்கும் பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி உரையாற்றினார். மன்றத்தில் சிறுகதை மன்னன் என்று அறியப்பட்ட மன்றத்தின் துணைத்தலைவர் திரு வ.இராமசாமி அவர்கள் ஆசிரியர்களின் பெருமையையும் அவர்கள் மன்னராலும் மதிக்கப்படத்தக்கவர்கள் என்றும் ஒரு சிறுகதை மூலம் விளக்கிக்கூறி பள்ளி தோன்றிய வரலாறு பற்றி சுருக்கமாக எடுத்துரைத்தார். பள்ளியின் பொருளாளர் திரு பா.சண்முகம் அவர்கள் விழா ஏற்பாடுகள் குறித்த தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டதோடு அனைவருக்கும் வாழ்த்துக் கூறி மகிழ்ந்தார். பேராசிரியர் செ.கந்தசாமி அவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு திருக்குறள் மற்றும் திருவள்ளுவரின் சிறப்புகள் பற்றி எடுத்துக் கூறினார். திருக்குறளை தான் ஆங்கில மொழியாக்கம் செய்யும் போது ஏற்பட்ட அனுபவங்களைக்கூறி மொழிபெயர்த்தலிளுள்ள இடர்களையும், சிரமங்களையும் எடுத்துக் கூறினார். எண்.1 டோல்கேட்டில் வசித்து வரும் நம் மன்றத்தின் புரவலர் பணி நிறைவு செய்துள்ள பாரதமிகுமின் நிறுவன அலுவலர் அரிமா பி. இராசேந்திரன் அவர்கள் பள்ளியின் செயல்பாடுகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்து அவைக்கு தனது பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்களை பதிவு செய்தார். இவ்விழாவினில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் எவர் சில்வர் தட்டுக்களை பரிசாக அளித்து தனது மகிழ்வினை பகிர்ந்துகொண்டார்.